கோவையை சேர்ந்த இளம் பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தனது காதலரை கரம் பிடித்து, இந்திய முறைப்படி திருமணம் செய்தது கோவை மக்கள் கவனத்தை பெற்றுள்ளது. 

கோவை, மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் நெதர்லாந்து நாட்டில் உள்ள நிஜ்வேர்டால் என்ற பகுதியில் சி.டி.எஸ்.ஐ.டி  நிறுவனத்தில் நிர்வாகம் மேலாளராக பணியாற்றி வந்து உள்ளார்.

அப்போது நெதர்லாந்து நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி ந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவரிடம் நட்பு ஏற்பட்ட பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கோவை இடிகரை அருகே தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அக்னி சாட்சியாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடைபெற்ற இந்த திருமணத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வேட்டி மற்றும் சேலைகளை அணிந்தவாறு திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது கவனத்தை பெற்றுள்ளது.