தென் மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ள சூழ்நிலையில் கோவையின் முக்கியமான நீர் ஆதாரங்களாக பார்க்கப்படும் சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணை அருகே மழை பெய்துள்ளதால் அங்கு நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகின்றது. 

நேற்று சிறுவாணி ஆணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 55 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 12 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்ந்து உள்ளது. 

50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையை தூர்வாரி ஆழப்படுத்தி இருந்தால் அதில் தண்ணீரை அதிகமாக சேமித்து வைத்து கோடை காலங்களில் கோவை மாநகராட்சி மக்கள் பயன்பெறும் படி நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் சிறுவாணி அணை ஏற்ற காலத்தில் தூர் வாரப்படாமல் உள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை அவசியம் எடுக்கவேண்டும் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி செய்தியாளர்களை சில நாட்களுக்கு முன் சந்திக்கையில் தெரிவித்திருந்தார். 

பில்லூர் அணை: 

இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றைய முன்தினம் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 90.50 அடியாக உள்ளது. 

மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் ஆணை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. மொத்தம் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 57 அடி வரை வண்டல் மண் தான் உள்ளது. இப்போது தான் நடவடிக்கை மெதுவாக துவங்கி உள்ளது.