கோவை நகரில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 1500 குப்பை தொட்டிகளில் 1400 அகற்றப்பட்டுவிட்டது. குப்பைகள் வெளிவரும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகம் உள்ள இடங்களில் மாலை/இரவு நேரத்தில் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் உள்ளது.
சரி குப்பை தொட்டிகளை ஏன் அகற்றவேண்டும்? இது எதற்காக நடைபெற்றது, இதனால் என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
மக்கக்கூடிய குப்பைகள் உடன் மக்காத குப்பைகள் கலவையாக வருவதால் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் அதை தரம் பிரிப்பது மிகவும் சவாலாக இருந்து வந்தது. குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சியின் உரம் தயாரிக்க மையங்களுக்கு சென்றால் தான் அவற்றை உரமாக மாற்ற முடியும்.
கலவையான குப்பைகள் சேர்ந்து வருவதை தடுக்க, பொதுமக்கள் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும் போதே அதை பிரித்து கொடுக்க அறிவுறுத்தியது. அத்துடன் கோவை மாநகரில் இருந்த பொது குப்பைத்தொட்டிகளை இந்த ஆண்டு துவக்கம் முதல் அகற்றியது. இப்போது 1400 குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுவிட்டது.
இதனால் கலவையான குப்பைகள் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேருவது குறைந்துள்ளது. ஆனால் இதற்கு மற்றொரு பக்கம் உள்ளது. பொது இடங்களில் இதற்கு முன்பு குப்பை தொட்டி இருந்த இடங்கள் மட்டுமில்லாது அது இல்லாத இடங்களிலும் குப்பைகள் பொதுமக்களால் கொட்டப்படுவது குறையவில்லை. குறிப்பாக பிளாஸ்டிக் பைகளில் குப்பைகள் கட்டப்பட்டு வீசப்படுவது குறைந்தபாடில்லை.
என்ன தான் நடவடிக்கை மாநகராட்சி தரப்பில் எடுக்கப்பட்டாலும் திறந்த வெளியில் குப்பை கொட்டுவது குறைவதில்லை. அதிக இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி கிடப்பதை பார்க்க முடிகிறது. இந்த குப்பைகள் வாரத்தின் 6 நாட்களும் ஆங்காங்கே தான் இருக்கின்றன. அதன் பின்னர் தான் எடுக்கப்படுகிறது.
ஒரு பகுதியில் சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டி உணவு கடைகள் முதல் பொது மக்கள் வரை அவர்கள் பயன்படுத்தி மீதம் ஆகும் பொருட்களை அவ்வப்போது பொதுவெளியில் வீசுவதை தான் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கோவை காந்திமா நகர் பகுதியில் இது போன்ற பல உதாரணங்களை பார்க்கமுடியும். இதே நிலைமை தான் கணபதி மற்றும் அதன் சுற்று பகுதிகளிலும்.
பொது இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாமல் இருப்பதால் சுற்றுசூழல் மீது குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்களும் ஒரு சந்தர்ப்பத்தால் உருவாக்கும் குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்த முடியாமல் போகிறது.
திறந்த வெளியில் குப்பைகள் இன்றளவும் ஜோராக தான் கொட்டப்பட்டு வருகிறது. அதில் எத்தனையோ பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் புதைந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை குப்பை தொட்டிகள் இருந்தால் இதில் ஒரு பங்காவது குறைந்திருக்கும். பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமாவது கொட்டப்படாமல் இருப்பதற்கு குப்பை தொட்டிகளும் அவசியம். மாநகராட்சி மறுபரிசீலனை செய்யுமா?
குப்பை தொட்டியே இல்லாத கோவையில் பிளாஸ்டிக் குப்பைகள் பொது இடங்களில் வீசப்படுவதை கட்டுப்படுத்த முடியுமா?
- by David
- Oct 08,2024