கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி தமிழக ஆளுநர் RN ரவியை இன்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை உட்பட மூத்த நிர்வாகிகள் பலர் கூட்டாக சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். 

அதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  சம்பவ வழக்கை  உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி  ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்:-

இந்த "விஷ சாராய" சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை சரியாக இல்லை. இந்த விஷயத்தில் திமுக-வை சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர். அரசு இந்த வழக்கை CBCID வசம் ஒப்படைத்து உள்ளதாக கூறுகிறது. இந்த சம்பவத்தில் அரசை தாண்டி வேறு எதுவும் CBCID கண்டுபிடிக்க போவது இல்லை. எனவே இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.

சென்ற புதன்க்கிழமை தான் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினாலும், செவ்வாய்க்கிழமையே பலரும் உடல்நிலை பாதித்து  மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆனால் இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறி இருக்கின்றது. அடுத்த நாள் ஆட்சியருடன் அமர்ந்து திமுக MLA சேர்ந்து இந்த சம்பவத்தை மறைந்திருக்கின்றனர்.

ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்தாலும் MLA மீது நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த பாரபட்சம் கண்டிக்கத்தக்கது. மக்கள் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த துரையின் அமைச்சரோ, முதல் அமைச்சரோ அங்கு சென்று பார்க்காதது தவறானது.  

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம்.