2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் அறிவிக்கப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.இதில் கோவைக்கென சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 

அவை பின்வருமாறு :-

கோவையில் சூலூரில் செமி கண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா 100 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும்.

கோயம்புத்தூரில் மேம்பட்ட பம்ப் மோட்டார் உற்பத்திக்கான ஒரு சிறப்பு மையத்தையும், வார்ப்படத்திற்கான (Foundry) ஒரு சிறப்பு மையத்தையும் (Center Of Excellence) தமிழ் நாடு தொழில்வளர்ச்சி நிறுவனமான டிட்க்கோ நிறுவும்.

கோவையில் 75 மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்.

கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே  சேவைகள் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைபெறும்.

 

கோவை ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின் நிலையம் அமைக்கப்படும். 

கோவையில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி படிப்புகளுக்கான மையம் அமைக்கப்படும். சென்னையில் இதேபோல மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

கோவை மாநகராட்சியில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை உள்பட திருச்சி, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி மாநகராட்சிகளில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெறும்.

அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, கோவையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மூலம் சென்னையில் உருவாகும் வியன் AVGC-XR திறன்மிகு மையத்தின் (Viyan AVGC-XR Centre of Excellence) துணை மையம் (RegionalHub) நிறுவப்படும். கோவை உள்பட மதுரை, திருச்சி. சேலம் மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் 3 ஆண்டுகளில் படிப்படியாக உருவாக்கப்படும்.

கோவை வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும்.