கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது.மொத்தம் 32.4 கிமீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலையை 3 பகுதிகளாக அமைக்கபடுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ) ,மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

3 கட்டமாக அமையும் இந்த புறவழி சாலை நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இதனால் கேரளாவில் இருந்து ஊட்டி, மைசூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஊட்டி வழியாகவோ அல்லது அங்கிருந்தோ கேரளா துறைமுகத்திற்கு செல்லும் சில லாரிகள் மாநகருக்குள் வர வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

முதல் பகுதியில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 11.80 கி.மீ. நீளத்திற்கு 4 வழி சாலை அமைக்கும் பணி ஆகஸ்ட் 2023ல் துவங்கியது. முதல் பகுதி சாலை மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய பகுதிகள் வழியே அமைகிறது.

தற்போது வரை மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த மேற்கு புறவழிச்சாலை பகுதியின் முதல் கட்ட பணிகளை 30% முடித்துள்ளனர். இதற்கு தேவையான அணைத்து நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 11.8 கிலோ மீட்டரில் 3 கிலோமீட்டர் அளவுக்கு தார் ரோடு போடப்பட்டுள்ளது.

மேற்குப் புறவழிச் சாலையின் முதல் பகுதி (first phase) பணிகள், அடுத்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக முடித்திடவேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு பணிகளை நடத்தி வருகின்றனர்.   

முதல் பகுதியில் வரவுள்ள முன்னேற்றம்!

இந்த புறவழிச் சாலையின் முதல் பகுதியில் மைல்கல் மற்றும் மாதம்படி பகுதிகளில் தலா 1 மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மைல்கல்லில், கோவை - பாலக்காடு சாலை வழியாகவும், மாதம்பட்டியில் கோவை - சிறுவாணி சாலை வழியேவும் இந்த மேம்பாலங்கள் அமைத்திட நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த மேம்பாலங்கள் அமைவதால் வாகனங்கள் இவ்வழியே தங்குதடையின்றி செல்ல முடியும் என்று கருதுகின்றனர்.

ரியல் எஸ்டேட் வர்த்தகம், அமோகம்!

தகவல்ப்படி, முதல் பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடங்களின் மதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சத்துக்கும் கீழிருந்துள்ளது. ஆனால் தற்போது பகுதிகளில் 1 சென்ட் நிலத்தின் விலையை ரூ. 6 முதல் 10 லட்சம் வரை உயர்ந்து உள்ளது என தகவல் உள்ளது. 

பிற பகுதி பணிகள் நிலவரம்

இரண்டாம் பகுதி பணிகளுக்கு தேவையான நிலங்களில் 70% கையகப்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள நிலங்களை ஓரிரு மாதங்களில் நிறைவு செய்ய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. 

இரண்டாம் பகுதியில் 12.10 கி.மீ. நீளம் கொண்ட சாலை அமைக்கப்பட வேண்டும். இந்த சாலை பேரூர், சித்திரைச்சாவடி (மேற்கு), வடவள்ளி, சோமையம்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வழியே அமையும்.மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தியதும் இங்கும் பணிகள் துவங்கும் என கூறப்பட்டுள்ளது. 

8.52 கிலோமீட்டர் தூரம் கொண்ட மூன்றாம் பகுதியில் கட்டப்படவுள்ள சாலை பண்ணிமடை, நஞ்சுண்டாபுரம், குருடாம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மற்றும் கூடலூர் வழியே அமையும். மூன்றாம் பகுதிக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த 6 மாதங்கள் வரை ஆகலாம்.