கோடை 2025: ஏன் கோவையில் இப்போதே இவ்வளவு வெப்பத்தை உணர்கிறோம்? வரும் நாட்களில் வானிலை எப்படி? வந்தாச்சு வெதர் மேன் அப்டேட்!
- by David
- Feb 21,2025
சென்ற ஆண்டு கோடை வெயில் காரணமாக கோவையில் ஏ.சி. விற்பனை மிக பெரும் அளவில் உயர்ந்தது. மாதம் 1500 முதல் 2000 வரை ஏ.சி.க்கள் கோவை மாவட்டத்தில் 2024 கோடையின் போது விற்பனை ஆகி இருக்கிறது.
இந்நிலையில் இந்தாண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதமே கொளுத்த துவங்கிவிட்டதாக கோவை மக்கள் உணருகின்றனர். இளநீர், தர்பூசணி விற்பனை எல்லாமே ஜோராக நடைபெற துவங்கி யுள்ளது. எங்கே ஏ.சி. ரிமோட் என தேட துவங்கிவிட்டனர்.
எதனால் இப்போதே இந்த வெயில்? என்ற கேள்வியை கோவை வெதர் மேன் சந்தோஷ் க்ரிஷிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது.
நமக்கு கோடை என்பது பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து மெல்ல துவங்கும். அப்படியே படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் இறுதிவரை வெப்பம் ஏற்றத்துடனே செல்லும். அதற்கு பின்னர் அந்த ஏற்றம் குறைய துவங்கும்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் வரும் வெயிலை ட்ரை ஹீட் - அதாவது ஈரப்பதம் இல்லாத வெப்பம் என்போம். நாம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரியின் பாதி வரை குளிர்ந்த சூழலை அனுபவித்து இருப்போம். அதற்கு அடுத்து வரும் நாட்களில் காற்றில் ஈரப்பதம் இல்லாத நிலையில் கோடை துவங்கும் போது அதை எதிர்கொள்வது மக்களுக்கு சிரமமாக இருக்கக்கூடும். தற்போது 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் செல்கிறது.
மார்ச் மாதத்தில் வெயில் அடித்தாலும் ஈரப்பதம் கொண்ட சூழல் இருக்கக்கூடும் என்பதால் அதை சமாளிக்க முடியும். மார்ச் மாதத்தில் 37 முதல் 38 டிகிரி வரை வெயில் இருக்கவும், ஏப்ரல் மாதத்தில் 39.5 டிகிரி வரை வெயில் செல்ல வாய்ப்புள்ளது.
மார்ச் மாதத்தில் அதிகபட்சம் ஒரு 5 நாட்களுக்கு அங்கங்கே கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதே போல ஏப்ரலிலும் அவ்வப்போது தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 20 வரை நாம் வெயிலை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.