கோடை 2025: கோவையில் வரும் நாட்களில் எப்படிப்பட்ட வானிலை நிலவும்? இதோ கணிப்புகள்...
- by David
- Mar 15,2025
வானிலை ஆய்வு மையம் தரப்பில் கோவையில் வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என கணிக்கப்பட்டு கருத்து வெளிவந்துள்ளது. அதில், இன்று முதல் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவையில் இன்றும் (மார்ச்15), நாளையும் குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோவையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், அடுத்த 10 தினங்களுக்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த ஈரப்பதம் கண்டிப்பாக மேகங்களை உருவாக்கும் ஆனால் அது மழை தரும் மேகங்களாக மாறுவது சற்றே கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொங்கு சமவெளி பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 22 ஆம் தேதிக்கு பிறகு ஆங்காங்கே பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. அதுகுறித்து பின்னர் உறுதிப்படுத்தப்படும் என அவர் கூறியிருந்தார்.