கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ள குடிநீர் தேவையை  சிறுவாணி, ஆழியாறு, பில்லுார் உள்ளிட்ட அணைகள் பூர்த்தி செய்கின்றன. இதற்காக பல குடிநீர் திட்டங்களும் நடைமுறையில் உள்ளது.

கோவை மாநகரின் 26 வார்டுகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக  சிறுவாணி அணை உள்ளது. மீதம் உள்ள வார்டுகளுக்கு ஆழியாறு மற்றும் பில்லூர் அணை மூலம் குடிநீர் வந்தடையும்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினரால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாலும் மேற்படி வெள்ளியங்காடு நீரேற்று நிலையத்தில் உள்ள கட்டமைப்புகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் வரும் 8ம் தேதி காலை 9 மணி முதல் 9ம் தேதி மாலை 6 மணி வரையிலும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை கோவை மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.