இந்த ஆண்டு துவக்கத்தில் குப்பை தொட்டிகள் கோவை மாநகரில் இருந்து அகற்றப்பட்டதற்கு பின்னர் இங்கு பொது இடங்களில் குப்பைகள் சாலைகளில் சிதறிக்கிடப்பது வழக்கமான காட்சியாக மாறிவருகிறது. 

220 வயது கொண்ட கோவையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படும் நிகழ்ச்சிகள் குறையாமல், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கோவையின் அழகை கெடுக்கிறது. 

இன்றும் கோவை மாநகரின் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது தொடர்கிறது. உதாரணத்திற்கு கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண் -25 காந்திமாநகர் பகுதியில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டதால், தொட்டி இருந்த இடத்திலேயே பொதுமக்கள் குப்பைகளை கொட்டிவருகின்றனர்.

இதே இடத்தில் முதலில் பச்சை நிற திரை கட்டி குப்பைகள் கொட்டுவதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. பலன் கொடுக்கவில்லை. "இங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என எச்சரிக்கை கொண்ட பேனர் வைக்கப்பட்டது. அப்போதும் குப்பைகள் கொட்டப்படுவது குறையவில்லை. 

இப்படிப்பட்ட நிலைமை மாநகரின் பல இடங்களில் உள்ளது. இதற்கு பொது மக்களை மட்டும் குறைசொல்ல முடியாது. 


2022ல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய தூய்மை நகரங்கள் ஆய்வில் கோவை 42ம் இடம் பிடித்துவிருது பெற்றது. ஆனால் 2023 ஆண்டில் 182ம் இடத்துக்கு சென்றது. இது இப்படியே நீடித்தால், தூய்மையான கோவை என்பது கனவாகவே தான் இருக்கும். 

பொது இடங்களில் குப்பைகள் இப்படி விடிய விடிய கிடப்பது அதிகரிப்பதால், இதற்கு தீர்வாக குப்பை தொட்டிகளை மீண்டும் கொண்டு வந்தால் மக்கள் முறையாக குப்பையை கொட்ட ஒரு வாய்ப்பாவது இருக்கும்.