நாளை (7.9.2024) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து கோவை மாநகரில் 1500 காவலர்களும் மாநகர பகுதியில் 1000 காவலர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில் மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மாநகா் பகுதியில் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூா் குளம் போன்ற நீர்நிலைகளிலும் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு இடங்களில் 2 நாட்கள் பின்னர் விசா்ஜனம் செய்யப்படும். எனவே இதற்கான காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் துறை தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கு தடையின்மை சான்று பெறவேண்டும் எனவும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் வைக்க கூடாது எனவும், சிலை கண்டிப்பாக களிமண்ணால் ஆனதாக இருக்கவேண்டுமே தவிர அதில் ரசாயன சாயங்கள் பயன்படுத்தி இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்படும் இடம் மற்றும் ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் பொது அமைதி, பாதுகாப்புக்கு எந்த வித இடையூறுமின்றி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PC: Peri_Periasamy/X
நாளை விநாயகர் சதுர்த்தி; கோவையில் பாதுகாப்பு பணியில் 2500 காவலர்கள்
- by CC Web Desk
- Sep 06,2024