இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சிக்கான மாணவர்கள் தேர்வு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 17-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கூறியதாவது:

“மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், நாட்டு நலப்பணித் திட்டம் வழியாக, “விக்சித் பாரத்” என்ற இளைஞர் பாராளுமன்றம் என்ற பிரம்மாண்ட விழாவை நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது அதன் நோக்கமாகும்.  

இத்தலைப்பில் கல்லூரி மாணவர்களிடமிருந்து ஒரு நிமிட காணொளி வரவேற்கப்படுகின்றன. இதற்காக பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி “My Bharath” என்ற இணையதளம் வழியாக பதிவுகள் பெறப்பட்டு வருகின்றன.

இப்போட்டியை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கல்லூரிகளைக் கொண்டு நடத்தி, சிறந்த காணொளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு மையமாக, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை,  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

18 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவர்கள், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் காணொளியை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். நடுவர் குழுவால் அதிலிருந்து சிறந்த 150 காணொளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும்.

மார்ச் 17-ம் தேதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு, காணொளி வெளியிட்டு விளக்கமளிக்க வேண்டும். அதிலிருந்து சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்த வாய்ப்பை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், விவரங்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் - 9524999995, முனைவர் ஆர்.நாகராஜன்-9994747862 ஆகியோரைத் தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.