இன்று திரைக்கு வந்துள்ள வேட்டையன் திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் சமீபத்தில் நாம் பார்த்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

சூப்பர்ஸ்டார் திரைப்படம் என்றால் அதில் அவர் தவறே செய்யாத தியாகி ஆக இருப்பார். படத்தில் மாஸ் காட்சிகள், வசனங்கள், ஸ்லோ மோஷனில் ஸ்டைலாக நடந்து வருவது, தலைமுடியை கோதுவது, கிளைமாக்ஸில் வில்லனை போட்டு பந்தாடி ஒரு பஞ்ச் வசனம் பேசி படத்தை நிறைவு செய்வது என கமர்சியலாக இருக்கும்.

TJ ஞானவேல் தன்னை ஒரு நல்ல கதை எழுத்தாளராக, சமூக சிந்தனை கொண்ட கலைஞனாக ஜெய் பீம் திரைப்படத்தில் காட்டியிருந்தார். ஜெய் பீமில் நாம் வழக்கமாக பார்த்த மாஸ் செயல்களுக்கு பதில் கதையில் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் தான் மாஸாக அமைந்திருக்கும். 

ரஜினிகாந்த், ஞானவேல் இருவரும் மக்கள் மத்தியில் எழுப்பக்கூடிய சிந்தனைகள், உணர்வுகள் மாறுபட்டவை. இப்படி இருக்க சீரான கமர்சியல் & சோசியல் கலவையில் வேட்டையன் திரைப்படம் கலக்கி வருகிறது.

பொதுமக்கள் மனதை பாதிக்கும் குற்றங்கள் சமுதாயத்தில் நடைபெறும் போது, குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், வழக்கை மாதக்கணக்கில் இழுத்தடிக்காமல் விரைவாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனும் அழுத்தம் போலீசாருக்கு உருவாகும் போது, அந்த நீதியை எனக்கவுண்டர் தருமா? என்கவுண்டர் என்பது முழுமையான விசாரணைக்கு பின்னர் நடைபெறும் ஒன்றாக இருக்குமா அல்லது கிடைக்கும் ஆதாரங்களை வைத்து முடிவு செய்து நடைபெறும் ஒரு சம்பவமா? இப்படி பட்ட கேள்விகளை TJ ஞானவேலின் வேட்டையன் எழுப்புகிறது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் பாசமிகு கூட்டாளியாக பஹத் பாசிலும், நிறைய காட்சிகளில் அவர் உடனே பயணம் செய்யும் முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் நடித்துள்ளனர். சில இடங்களில் ரசிகர்களுக்கான காட்சிகள், வசனங்களை இயக்குனர் படத்தில் வைத்திருந்தாலும் அதனால் கல்வி, என்கவுண்டர், அதிகாரம், நீதி இதுபற்றி இயக்குனர் ஞானவேல் சொல்ல வரும் கருத்துக்கள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை.

ஜெய் பீமில் மணிகண்டனின் கதாபாத்திரம் கொடுத்த தாக்கத்தை துஷார விஜயன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வழங்கவில்லை. அதே போல அந்த படத்தில் பிரகாஷ் ராஜ் காட்டிய கம்பீரம் இந்த படத்தில் அமிதாப் பச்சனிடம் இருந்து கிடைக்கவில்லை. 

ஆனால் பஹத் பாசிலின் கதாபாத்திரத்தை அழகாக, ஆழமாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். சுட்டித்தனமான அவரின் பேச்சும், ஓரிரு இடங்களில் மட்டும் சூப்பர் ஸ்டார் பேசும் நகைச்சுவை வசனங்களை தவிர படம் வேகமாக, ஒரு திரில்லர் திரைப்பட பாணியில் நகர்கிறது. 

திரைக்கதை எழுதிய கிருத்திகா அவர்களுக்கு பாராட்டுகள். அனிருத்தின் இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. நிச்சயமாக இந்த படம் திரைப்பட ரசிகர்களை ஏமாற்றாது.