கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களில் அந்த நிலையை மாற்றவும் வாகனங்கள் எளிதாக செல்லவும் பல இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

கவுண்டம்பாளையம்  பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பள்ளம் சாலை முதல் ஸ்ரீவாரி வைபவ் அபார்ட்மெண்ட் வரை 1.2 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு 2022ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 

ஆனால் 2023 ஆகஸ்ட் மாதத்தில் சங்கனூர் பள்ளம் சாலை வழியே அமைக்கப்பட்ட ட்ராபிக் சிக்னலால் அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்ட மேம்பாலத்திலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

துடியலூரில் இருந்து வருகையில் அமைந்துள்ள GN மில்ஸ் மேம்பாலம் மூலம் வரும்போது எந்த இடையூறுமின்றி வந்துவிடலாம். ஆனால் கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை ஸ்ரீவாரி அபார்ட்மெண்ட் பகுதியில் இருந்து ஏற துவங்கினால் பாதி மேம்பாலம் வரை பறந்து கூட வரலாம் ஆனால் அதற்கடுத்து உள்ள மீதி மேம்பாலத்தை கடப்பது பல நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சவாலாக தான் அமைந்துவிடுகிறது.

இதற்கு காரணமாக பலரும் கூறுவது என்னவென்றால், சங்கனூர் பள்ளம் சாலை வழியே அமைந்துள்ள டிராபிக் சிக்னலும், அதே இடத்தில் அமைந்துள்ள யு டர்னும் தான்.  

யு டர்ன் இருப்பதால் ஒரு பக்கம் வாகனங்கள் திரும்புகின்றன, மற்றொரு பக்கம் சிக்னல் கிடைத்தால் வாகனங்கள் சாலையை கடக்க நகருவதால் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்க மற்ற வாகனங்கள் திணறுகின்றன. இந்த நிலை மாறுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்றன.



Photos by David Karunakaran.S