அரசு மற்றும் தனியார் கூட்டு பங்களிப்புடன் ரூ.700 கோடி மதிப்பில் கோயம்புத்தூர் சந்திப்பை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த விரிவாக்கம் பற்றி முன்னதாக வெளியான விரிவான திட்ட அறிக்கை (DPR) குறித்த தகவலில், கோவை ரயில்வே சந்திப்பு கட்டிடத்தை செங்குத்தாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனவும் இதற்காக கூடுதல் நிலங்கள் கையகப்படுத்த தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மேம்படுத்துதல் பணிகளில் ஒரு பகுதியாக தற்போதைய ஜங்ஷன் பகுதியில் ஏர் கண்டிஷனிங் வசதி உள்பட பல நவீன வசதிகளுடன் பல மாடிகளை சேர்க்கவும், ரயில் நிலையத்திற்குள் வருபவர்களின் வசதிக்காக வணிக வளாகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் அண்மை தகவல் படி கோவை ரயில்வே சந்திப்பை மேம்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெரிய வருகிறது.

மேலும் இந்தப் பணிகளை தென்னக ரயில்வே துறையின் கட்டுமான அமைப்பு கையில் எடுப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியவுடன் அப்பணிகள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கோவையை சேர்ந்த தொழில் துறையினர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி நேரில் சந்தித்து இந்த மேம்படுத்துதல் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.