கோவை மாநகரில் உள்ள பழைய பாதாள சாக்கடை குழாய்களை புதுப்பிக்க மாநகராட்சி திட்டம்! தற்போது நடைபெறும் திட்டப்பணிகளின் நிலைமை என்ன?
- by David
- Mar 05,2025
கோவை மாநகரின் பழைய 60 வார்டுகளுக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களையும் அது சம்மந்தமான சில கட்டமைப்புகளையும் ரூ.300 கோடி மதிப்பில் புதுப்பிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த குழாய்கள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலையில், இதை புதுப்பிக்க தேவை எழுந்துள்ளது. மக்கள் தொகை மாநகரின் வெவ்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப இந்த குழாய்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
எனவே இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரித்து வருகிறது. 1 மாத காலத்திற்குள் அறிக்கையை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நிதியை உடனே வழங்கும் பட்சத்தில் திட்டத்தை முழுவதுமாக துவங்கவும், ஒருவேளை கேட்கும் நிதி பகுதிகளாக வழங்கப்பட்டால் பல கட்டங்களில் இந்த புதுப்பித்தல் பணிகளை முன்னெடுக்க மாநகராட்சி யோசித்து வருகிறது.
பாதாள சாக்கடைத்திட்டம் விடுபட்ட பகுதிகளிலும், 2011 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதில் குறிச்சி - குனியமுத்தூர் பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ளது. வடவள்ளி - வீரகேரளம் பகுதியில் மொத்தம் 230 கி.மீ.க்கு நடைபெறும் பணிகளில் 78 கி.மீ. நிறைவேறியுள்ளது.
சின்னவேடம்பட்டி - சரவணம்பட்டி - வெள்ளக்கினர் பகுதிகளில் மொத்தம் 202 கி.மீ.க்கு நடைபெறும் பணிகளில் 48 கி.மீ.க்கும், கவுண்டமபாளையம் - துடியலூர் பகுதிகளில் 299 கி.மீ.க்கு நடைபெறும் பணிகளில் 99 கி.மீ.க்கு பணிகள் முடிந்துள்ளது.
ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உட்பட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 135 கி.மீ.க்கு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 63 கி.மீ. பணிகள் முடிவடைந்துள்ளது.