பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க நாளை (23.3.25) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை தரவுள்ளதால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை 11 மணிக்கு கோவைக்கு வருகிறார். அங்கிருந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கக செல்கிறார்.

பின்னர் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.