ஏப்ரல் இறுதியில் கோவை சர்வதேச ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி
- by David
- Apr 17,2025
கோவையில் சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் அதற்கு பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் 27ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை துவக்கி வைக்க கோவை வரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதே நாளில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமையும் அரசின் உலக தரம் கொண்ட ஹாக்கி மைதான திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 23ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி கோவைக்கு வருகை தரவிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள் திடீரென அவரின் வருகை தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் கோவை வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இம்மாதத்தின் கடைசி ஞாயிறு (ஏப்ரல் 27) அவர் கோவைக்கு வர உள்ளார். அப்போது ஜல்லிக்கட்டு போட்டியுடன் ஹாக்கி மைதான திட்டமும் துவக்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.எஸ். புரம் பகுதியில் அமையும் ஹாக்கி மைதானம் 2 கட்டங்களாக உருவாக்கப்படும் என தெரியவருகிறது. முதல் கட்டத்தில் ஹாக்கி மைதானத்தின் முக்கிய அங்கமான டர்ப் தளம், 6 உயர் மின் கோபுர விளக்குகள், சுற்றுச்சுவர், கழிவறைகள், விளையாட்டு வீரர்களுக்கான உடை மாற்று அறை ஆகியவை அமைக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் டர்ப் தளத்தில் 20,000 லிட்டர் நீர் செலுத்துவது அவசியம் என்பதால் அதற்கான நீர் தேக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் இந்த நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் அம்சம் இடம்பெறவுள்ளது. 2ம் கட்டத்தில் பார்வையாளர் அரங்கம், முக்கியஸ்தர்களுக்கான நுழைவு, தனி தளம், சார் நிறுத்தம், அலுவலகம் ஆகிய சில வசதிகள் இடம்பெறும். என கூறப்படுகிறது.