கோவையில் பள்ளிகளில் காலை உணவு தயாரிப்பதற்கான வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்கிறவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி  கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை கோவை மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி ,பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு மூலம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் அரசு தெரிவித்துள்ள நிபந்தனை மற்றும் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 



இதற்கு விண்ணப்பம் செய்கிறவர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.



மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே துவக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் துவக்கப்படிப்பு முடித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால் அந்த சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். 

 


குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.  தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடியஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்கவேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்."

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.