பேரூர், மருதமலை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், கெம்பனூர், காளையனூர், தடாகம் போன்ற பகுதியில் உணவு, தண்ணீர் தேடி கடந்த சில மாதங்களாக ஆக்ரோஷமாக சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானை விளைநிலங்கள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தி, மனிதர்களையும் தாக்கி வருகிறது.
அந்த யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்கு விரட்டவும், தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் வனத்துறையினரை மனு அளித்து, வலியுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள புளியந்தோப்பு சென்ற தேவராஜ் என்பவரை அங்கு சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவராஜ், கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள மலை அடிவாரத்தில் உள்ள அட்டுக்கல் ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்த வந்த இவருக்கு துளசி எனும் மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 மற்றும் 6 - ம் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.
யானையால் தாக்கப்பட்டு தேவராஜ் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து, அங்கு வந்த கோவை சரகம் வனத்துறை மற்றும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர்.
மேலும் தங்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை வசதி உடனடியாக செய்து தர வேண்டும் அப்பகுதியில் கழிவறை இல்லாததால் அருகே இருந்த புளியந்தோப்புக்கு சென்ற போது உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதனை அடுத்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு உடலை கொண்டு சென்று பேச்சுக்கு வார்த்தையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கழிவறை கட்டிக் கொடுத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஒரு அடிப்படை வசதிக்காக கோவையில் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு பழங்குடியினர்! என்ன காரணம்?
- by CC Web Desk
- Sep 13,2024