கோவை மாநகர் வழியே அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காணும் விதத்தில் சாய்பாபா காலனி சந்திப்பு பகுதியில் 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது அழகேசன் சாலையில் துவங்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே முடிவு பெறுகிறது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால் தேர்தல் வந்த காரணத்தால் அங்கு இதர பணிகளை முன்னெடுக்க முடியாமல் போனது.

இந்த வாரத்தில் இந்த மேம்பாலம் குறித்த பணிகள் மீண்டும் துவங்கும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.