கோவையில் பொதுமக்கள் நட்டு பராமரித்துவந்த மரங்கள் வணிக நோக்கத்திற்காக படுகொலை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

காந்திபுரம் கிராஸ்கட் சாலை கோவையில் படு பிசியான சாலையாக இருந்து வருகிறது. கோடைகாலத்தில் சாலையோரத்தில் மக்கள் நடந்து செல்லக்கூட அவதியடைந்து வந்த நிலையில், காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, "பசுமைத் தொடர்ச்சி" என்ற பெயரில் இணைந்த ஆட்டோ டிரைவர்கள் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலையின் ஓரங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு மரங்களை நடவு செய்தனர். தங்கள் ஆட்டோக்களில் தினமும் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றி, அந்த மரக்கன்றுகளை வளர்த்தனர்.

மரங்கள் நன்கு வளர்ந்திருக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள சில வணிகர்கள் தங்கள் கடையின் முகப்பு மறைப்பதாகக் கூறி மரத்தை வெட்டி அகற்ற முயன்றனர். அது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கிராஸ்கட் சாலை சாம்சங் ஷோ ரூம் எதிரே உள்ள 4 மரக்கன்றுகளை சிலர் ஆசிட் ஊற்றிப் பட்டுப் போகச் செய்துள்ளனர். மரக்கன்றுகளை நீண்ட நாட்களாகப் பராமரித்து வந்த ஆட்டோ டிரைவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பசுமைத்தொடர்ச்சி அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், "காந்திபுரத்தில் இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே போல் ஒரு மரத்தைப் படுகொலை செய்தனர். தற்போது 4 மரங்களுக்கு ஆசிட் ஊற்றியுள்ளனர். அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வணிக நோக்கத்திற்காக மரங்களின் மீது கைவைக்காமல் இருக்கத் தகுந்த முன்னேற்பாடுகளை மாநகராட்சி நிர்வாக மேற்கொள்ள வேண்டும்." என்றார்.