தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வருகையை முன்னிட்டு கோவையில் வரும் 5, 6 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

 

கனரக வாகனங்கள் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. இதர வணிக ரீதியிலான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 

5ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் அவிநாசி சாலையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

நகருக்குள் வரும் வாகனங்கள்:

5ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நீலம்பூரிலிருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.

 

நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் :

கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்திபுரத்திலிருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

 

திருச்சி சாலை:

திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, கூட்ஸ் ஷெட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். 

ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

சத்தி சாலை

சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம்.

 

சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில்ஸ், சந்திப்பு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

 

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.