தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, இராஜ வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க கோவை மாநகர காவல் துறை சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

முதலாவதாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் 26.10.2024 ஆம் தேதி முதல் கீழ்கண்ட சாலைகள் வழியாக செல்ல வேண்டும்.

1. ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம், அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி சுங்கம் புறவழிச்சாலையை அடைந்து வாலாங்குளம், கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2. ஒப்பணக்கார வீதி வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக செல்வபுரம் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி செட்டிவீதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சலிவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3. கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை, சிந்தாமணி, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக செல்லாமல் 100 அடி ரோடு, வடகோவை சிவானந்தாகாலனி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

4. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பார்க் கேட் LIC, அண்ணா சிலை, லட்சுமி மில் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதே வழியாகத்தான் திரும்பவும் வரவேண்டும் நகருக்குள் வர அனுமதி இல்லை.

ஒப்பணக்காரவீதி மற்றும் ராஜவீதி பகுதிக்கு பொருட்கள் வாங்க வரும் பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் ஒப்பணக்காரவீதி போத்தீஸ் சந்திப்பு வழியாக செல்லாமல், ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி. ராஜவதி வழியாக ஒப்பணக்காரவீதி லாலா கார்னரில் பயணிகளை இறக்கி விடவேண்டும். மேலும், சரவணா செல்வரத்தினம் முன்பும், ஐந்து முக்கு பகுதியிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

கிராஸ்கட் ரோடு மற்றும் நஞ்சப்பா ரோடு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மாநகரின் பல இடங்களில்  தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள்:

உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம கோவை மாநகராட்சியால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தம். (இலவசம்). ராஜவீதி சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங். (கட்டண முறை) மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி பார்க்கிங் (கட்டண முறை) பெரிய கடைவீதி ராயல் தியேட்டர் பார்க்கிங் (கட்டண முறை) என்.எச்.ரோடு ராஜா தியேட்டர் மற்றும் அதற்கு எதிரிலுள்ள போத்தீஸ் பார்க்கிங், (கட்டண முறை) சிறைத்துறை மைதானம் பார்கிங் மத்திய பேருந்து நிலையம் எதிரில் (இலவசம்) கிராஸ்கட் ரோடு SR Jewellery எதிர்புறம் உள்ள மார்டின் மைதானம் (இலவசம்), வடகோவை மாநகராட்சி பள்ளி மைதானம் (இலவசம்), கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ், (கட்டண முறை) கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பார்க்கிங் (கட்டண முறை).