கோவை மாநகரில் உருவாகும் கோழி இறைச்சி கழிவுகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் புதைப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகித்து வருகின்றனர்.

அறிவியல்பூர்வமான முறையில் இறைச்சி கழிவுகள் மேலாண்மை செய்யப்பட்டு உரமாகவோ அல்லது விலங்குகளுக்கான தீவனமாகவோ மாற்றப்படவேண்டும். முன்பு வெள்ளலூர் குப்பை கிடங்கில் இறைச்சி கழிவு மேலாண்மை செய்யும் மையம் இயங்கி வந்தது. இதன் இயக்கத்தால் சுற்றுப்பகுதிகளில் துர்நாற்றம் வீசப்பட்டதால், அது கடந்த மார்ச் 30ம் தேதி மூடப்பட்டது. 

இந்த நிலையில் அதன் இயக்கம் நிறுத்தப்பட பின்னர் குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகள் எடுத்து செல்லப்பட்டு வருவது எதற்கு என்ற கேள்வி அப்பகுதி மக்களிடம் உள்ளது.

"வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி, டன் கணக்கில் இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுகின்றன" என செய்திகள் வெளிவருகின்றன. குப்பை கிடங்கிற்குள் கடந்த ஞாயிறு மற்றும் திங்களன்று கோவை மாநகராட்சியின் பெயர் கொண்ட சிறு டெம்போக்களில் இறைச்சி கழிவுகள் எடுத்து செல்லப்படுவது அப்பகுதி மக்களால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட பழைய கழிவுகளால் நிலத்தடி நீர் அந்த வளாகம் அருகே உள்ள சுற்றுப்பகுதிகளில் மாசடைந்து வருகிறது. போர்வெல்-கள் மிகவும் பாதிக்கப்பட்டு தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது.  இந்த நிலையில் கோவை மாநகரில் தினம் சுமார் 8-9 டன் கோழி இறைச்சி கழிவுகள் உருவாகும் பட்சத்தில் அவை குப்பை கிடங்கில் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், நோய் தொற்று அபாயம் ஏற்படலாம் என மக்கள் கருதுகின்றனர். 

அண்மை தகவல் படி, கோவை மாநகரில் உருவாகும் இறைச்சி கழிவுகள் பெருமளவு கேரளா, மதுரை, மைசூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு மேலாண்மை மையங்களுக்கு அனுப்பப்படுவதாகும், மிகவும் குறைந்த அளவில் தான் இறைச்சி கழிவுகள் இங்கு புதைக்கப்படுவதாகும் கோவை மாநகராட்சியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு சார்பில் இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் குப்பைக்கிடங்கில் ஆய்வு நடத்தி உள்ளனர். சோதனையின் முடிவுகள் வாரியத்தின் உயர் அதிகாரிகள் முன்பு 1 வாரகாலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இறைச்சி கழிவுகள் புதைக்கப்படும் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குப்பைக்கிடங்கு தொடர்பாக புது விதிமுறை : குப்பை கிடங்கிற்குள் வெளிநபர்கள் வராமல் இருக்க நுழைவாயிலில் செக் போஸ்ட் போடப்பட்டுள்ளது. அங்கு யார் வந்தாலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனுமதித்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியுமாம். மேலும் உள்ளே குறிப்பிட்ட இடத்துக்குள் மட்டுமே தான் செல்ல அனுமதிக்கப்படுமாம். இந்த நடவடிக்கை பாதுகாப்பு கருதி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.