தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று பொங்கல் விழா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 06.00 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தரை மத்திய பண்ணை வளாக தொழிலாளர்கள் மரியாதை நிமித்தமாக சாரட்டு வண்டியில் அழைத்துச் சென்றனர். பின்னர் மத்திய பண்ணையில் மகளிர் உடன் இணைந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி மற்றும் பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனர் முனைவர் கலாராணி ஆகியோர் பச்சரிசி இட்டு பொங்கல் வைத்தனர். தைத்தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

பின்னர் பசு மாட்டிற்கு வழிபாடு செய்து பட்டியில் வலம் வரச் செய்து பட்டி மிதிக்க வைத்தனர். இதில் பசுமாடானது முதலில் தண்ணீரிலும் அதைத் தொடர்ந்து நவதானியங்களிலும் கால் வைத்தது. இந்நிகழ்வு விவசாயத்தின் பெரும் வளர்ச்சியினயும், விவசாய வளர்ச்சிக்கான ஆதாரம் நல்ல முறையில் இருப்பதாகவும் ஐதீகம் என கருதப்படுகிறது.

நிறைவாக பண்ணை தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி பல்கலைக்கழக சார்பாக தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.