கள்ளசாராயத்தால் தமிழகத்தில் அண்மையில் 12க்கும் மேற்பட்டோர் இறந்துபோன சம்பவத்திற்கு பின்னர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தென்னை, பனை மரங்களில் கள் இறக்க தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டுமென கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.



இந்நிலையில் இதுபற்றி தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கோவையில் இதுபற்றிய தகவலை தெரிவித்தார். 

கோவையில் உள்ள  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறு தானிய கருத்தரங்கு மற்றும் எதிர்கால உணவு கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும் என்று கூறினார். 


வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறு தானிய ஆண்டு கண்காட்சி குறித்து அவர் பேசுகையில்  சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று கூறினார். 


கண்காட்சியில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புதிய ரக சிறு தானியங்கள் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். மேலும் அவர் சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.