சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்.எஸ்.எம்.இ. துறையில், 5068 நிறுவனங்களுடன் தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. 

 

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 5,068 நிறுவனங்களில், 1,277 நிறுவனங்கள் மொத்தம் ரூ.13,003.16 கோடி முதலீடு செய்து, உற்பத்தியை துவங்கி, சுமார் 46,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருந்தனர். 

 

கோவை மற்றும் சேலம் மண்டலப் பகுதிகளை சேர்ந்த நிறுவனங்கள் சில ஒப்பந்தம் செய்தும் தொழில் துவங்காத சூழல் நிலவிவருகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. 

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட 5,068 நிறுவனங்களில் தற்போது வரை 1645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை தொடங்கி இருப்பதாக கூறினார். 

 

மீதம் 3,423 தொழில் தொடங்காத வங்கி கடன் பெற்ற தொழில் முனைவோர்கள் உள்ளனர். அவர்களில் கோவை, சேலம் மண்டலத்தை சேர்ந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் கோவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிரச்சனைகள் கேட்டறிந்து, அதற்கான தீர்வு ஏற்படுவதற்காக அனைத்து துறை அதிகாரிகளையும் இங்கே அழைக்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் கூறினார்.  

 

8 மாத காலமாக தொழில் தொடங்காததற்கான காரணம், அதற்கான நடைமுறை சிக்கல்களை களைந்து, அவர்கள் விரைவில் தொழில் தொடங்க ஆவண செய்யப்படும் என்றார். 

 

இந்நிகழ்வில், மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "மற்ற மாநிலங்களை காட்டிலும் நம்முடைய மாநிலத்தில் கட்டணம் என்பது குறைவு தான்... கடந்த ஆட்சியில் உதய் திட்டத்தில் அவர்கள் கையெழுத்து போட்டதால் தான் இன்று மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதற்கு முழு காரணம் நாங்கள் இல்லை. கடந்த ஆட்சியாளர்கள் தான்," என்றார். 

 

நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் விதமாகவும் மத்திய அரசு 12 ஸ்மார்ட் தொழில் நகரங்களை அமைக்க உள்ளது. இதன்மூலம் ரூ.1.52 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள 12 ஸ்மார்ட் தொழில்நகரங்களில் தமிழகத்தில் எந்த நகரமும் இடம்பெறவில்லை. 

 

இதுபற்றி அமைச்சரிடம் கேட்டதற்கு, 

"திமுக அரசு அவர்களுக்கு ஆகாது என்பதால் அவர்கள் ஒருமாதிரி நடந்து கொள்கின்றனர்," என்றார்.

 

"நமக்கு மெட்ரோ ரயிலுக்கான நிதியையும் தரவில்லை, கல்வித்துறைக்கு வழங்கவேண்டிய ரூ.500 கோடியும் தரவில்லை. இதை எல்லாம் கடிதம் மூலம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்," என்றார். 

 

முன்னதாக கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கும் காப்புரிமை மாநில அனுமதி திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கும் என மொத்தம் 46 நபர்களுக்கு 6.54 கோடி மானியம் வழங்கப்பட்டது.

 

ஆனால் இதெல்லாம் வியாபாரம் துவங்க வழங்கப்படும் நிதியாக உள்ளது; உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நிதிகள் வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, "உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தர வலியுறுத்தி உள்ளோம். MSME நிறுவனங்கள் குறிப்பிட்ட விகிதத்தினருக்கு கடன் வழங்கிட உத்தரவிட்டுளோம். அது வரும் காலத்தில் நடைமுறைக்கு வரும்," என கூறினார்.

 

இந்நிகழ்வில் இத்துறையின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.