கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சரவணம்பட்டி கிராமம், விநாயகபுரம் வார்டு எண்.21 கீழ் உள்ள பாரதியார் வீதி, அபிராமி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளில் பல்வேறு திட்டங்களுக்கு தோண்டப்பட்ட குழிகளாலும், மழையினாலும் சேதமடைந்த சாலைகள் பல காலமாக அப்படியே இருந்தன. குறிப்பாக பாரதியார் வீதியில் சாலை பராமரிப்பின்றி கடந்த 15 வருடங்களாக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 21 ஆம் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் கடந்த ஆண்டு இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் தொடர்ந்து சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி வேண்டி கேட்டுக்கொண்டார். 

அதன் காரணமாக வார்டு எண்.21க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வுக்கு பின்னர் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அடுத்து ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள இந்த சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின்னர் அங்கு பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று இருக்கிறது.

இந்நிலையில் அதற்கு பின்னர் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த பேட்ச் ஒர்க் பழுதடைந்தது. இதனால் மீண்டும் சாலையின் பல்வேறு இடங்களில் குண்டு குழி இருப்பதால் அந்த சாலையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருந்தபோதிலும் இதற்கு ஒரு தீர்வு வழங்கப்படவில்லை. எப்போதுதான் இந்த பகுதி மேல் அரசின் கவனம் விழும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சமீபத்தில் பெய்த கோடை மழையால் விநாயகபுரம் வார்டு எண்.21 கீழ் உள்ள பாரதியார் வீதி பகுதியில் சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இதில் பயணிப்பது மிக சவலாகவும் பெரும் சிரமமாகவும் உள்ளது. 
மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தே 1 ஆண்டுக்கும் மேலே ஆகிவிட்டது. இந்த நிலையில் இதற்கு பிறகாவது இங்கு தரமான சாலை வசதி வழங்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.