கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை அருகேயுள்ள வனப்பகுதி அருகே வரும் நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன் கோம்பை எனும் பகுதியில் மணி (48) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

அதையடுத்து கடந்த 23ம் தேதி அவரின் உடல் அங்கிருந்து அவருடைய கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டபோது, நீரடி எனும் பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடம்பன் கோம்பைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், வாகனத்தை இயக்க மறுத்துவிட்டார். இதனால் நீண்ட கம்பங்களில் துணியை கட்டி, மணியின் உடலை ஊர்மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள்.

 

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, செய்தி தொலைக்காட்சிகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் மையங்களில் கோவை கலெக்டர் பவன் குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

 

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, அவரிடம் இந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

 

கடம்பன் கோம்பை பற்றிய செய்தி நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக அங்கு  கோட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. அங்கு பல வகையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட ரூ. 2.5 கோடி மதிப்பிலான சாலைகளை அங்கு அமைக்க மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

 

இந்த வாரத்தில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்குவோம்.இத்துடன் பிற வசதிகள் எல்லாம் அங்கு முழுமையாக இருக்கிறதா என்பதை பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2-3 மாதங்களில் அப்பகுதியில் அனைத்து பணிகளும் துவங்கும் என தெரிவித்தார்.

 

மேலும் வனத்துறை அருகே இருக்கக்கூடிய மலை கிராமங்களில் இது போன்று வசதிகள் இல்லாத சூழல் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.