கோவையில் இந்த மணிக்கூண்டு மட்டுமல்ல, அதன் அருகே உள்ள மேம்பால சுரங்கப்பாதையையும் கட்டாயம் கவனிக்க வேண்டும்!
- by David
- Jan 16,2025
கோவை மாநகரில் வடகோவை வழியே செல்லும்போது கண்டிப்பாக நம் கண்ணில் படும் ஒன்று மேம்பாலம் அருகே உள்ள மணிக்கூண்டு. கோவையில் சமூக சேவைகளை சிறப்பாக முன்னெடுக்கும் ரவுண்ட் டேபிள் அமைப்புகளால் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு. கோவையின் அடையாளங்களில் ஒன்று என்றே இதை சொல்லலாம். கடைசியாக 2019ல் இது புதுப்பிக்கப்பட்டது.
மணிக்கூண்டின் 3 பகுதிகளில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் மட்டும் ரவுண்ட் டேபிள் அமைப்பின் சின்னம் இடம்பெற்று இருக்கும்.
சமீப காலமாக இந்த மணிக்கூண்டின் 2 இடங்களில் நேரம் தவறுதலாக காட்டப்படுகிறது. மேம்பாலத்தின் மேலே செல்லும்போது இது வெளிப்படையாக தெரிகிறது. இது விரைவில் அந்த அமைப்பால் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாலத்தில் செல்லும் போது இது பலர் கண்ணில் தென்படும். இதை ரவுண்ட் டேபிள் அமைப்பு பார்த்துக்கொள்ளும். ஆனால் அதே பகுதியிலோ அல்லது மேம்பாலத்திலோ பயணிக்கும் போது வெளிப்படையாக தெரியாத சிக்கல் ஒன்று உண்டு. அதை தனியாரால் அல்ல அரசு துறையால் தான் சரி செய்ய முடியும்.
அது என்ன?
சமீபகாலமாக வடகோவை மேம்பாலத்தின் சுரங்க பாதையின் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதும், குப்பைகள் தேங்குவதும் தொடர்ந்து நடைபெறும் செயலக உள்ளது. அதே போல மாலை நேரங்களில் இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி ஓரத்தில் சிலர் மறைந்து நின்று மது அருந்துவது, சிகரட் பிடிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சிலர் குப்பைகளை மேம்பாலத்தின் ஓரங்களில் வீசி செல்கின்றனர். இதனால் மேம்பாலத்தின் சுரங்க பகுதி சுகாதாரமற்றதாகவும், மாலை நேரங்களில் பாதுகாப்பு அற்றதாகவும் வாகனஓட்டிகள் சிலரால் உணரப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை தேவை.