கோவை மாநகரத்தின் பரபரப்பான பகுதியான அவினாசி சாலையின் பல இடங்களில் யூ டர்ன் வசதி அமலில் உள்ளது.

 

வாகன ஓட்டிகள் சிக்னல்களில் சில வினாடிகள் நின்று செல்வது வழக்கமாக இருந்த கோவையில் இனி சிக்னல்கள் குறைக்கப்பட்டு யூ டர்ன் அங்கு நிறுவப்பட்டு வாகன ஓட்டிகள் நிற்காமல் செல்லலாம் எனக்கூறி முந்தைய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த திட்டம் 2023ல் கொண்டுவரப்பட்டது. 

 

இந்த திட்டம் குறித்து கலவையான விமர்சனங்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் உள்ளது. குறிப்பாக சிக்னல் இல்லாததால் பாதசாரிகளை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் வாகன ஓட்டிகள் பறந்து செல்கின்றனர் என விமர்சனம் உள்ளது.

 

இதுபோல நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் யூ டர்ன் தான் பெஸ்ட் என சிலர் எண்ணுவதால் இது இன்னும் அமலில் உள்ளது.

 

அவினாசி சாலையின் சில இடங்களில் கனரக வாகனங்கள் யூ டர்ன் செய்ய அனுமதி கிடையாது. இது போன்ற பெரிய வாகனங்கள் யூ டர்ன் செய்யும் போது அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

திருப்புவதற்கு வசதியற்ற சூழல் இருந்தும் சில இடங்களில் கனரக வாகனங்கள் யூ டர்ன் செய்கின்றன. 

 

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அவினாசி சாலையில் நடைபெறுகிறது. அதேபோல யு டர்ன் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பரபரப்பான நேரங்களில் வாகனங்கள் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலை தான் காணப்படுகிறது. 

 

மேலும் வாகன ஓட்டிகள் தாங்கள் அணுக வேண்டிய இடத்திற்கு அருகே யூ டர்ன் இல்லாமல் இருப்பதால் சற்றுதூரம் சென்று அங்கு உள்ள யூ டர்னில் வண்டியை திருப்பி வர வேண்டிய நிலையுள்ளதால், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் தடுப்பதற்கு இடையே உள்ள இடைவெளியை பயன்படுத்துகின்றனர்.

இதுவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழலையும், எதிர்பாராத விபத்துகள் ஏற்படுத்தக்கூடிய சூழலையும் உருவாக்குகிறது. 

 

முன்பிருந்தது போலவே ட்ராபிக் சிக்னல் இருந்தால் இது போன்ற செயல்கள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இந்த வசதி அறிமுகம் ஆன 2023ஆம் ஆண்டே இதை திரும்ப பெற்று சிக்னல் வசதியை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கருத்துக்கள் எழுந்தது. அது பற்றி செய்தித்தாள்களிலும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.