சுமார் 7 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் தண்டவாளம் அருகே தமிழக வனத்துறையால் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு மூலம் அப்பகுதியில் ரயில்களில் வன உயிர்கள் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் பெருமளவு குறைந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த பிப்ரவரி மாதம் செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த கண்காணிப்பு அமைப்பு இப்பகுதியில் நிறுவப்பட்டது. 2008 முதல் 2024 வரை இந்த வழியே 11 காட்டு யானைகள் வேகமாக வரக்கூடிய ரயில்களில் மோதி இறந்த என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதம் இந்த அமைப்பை நிறுவியதற்கு பின்னர் அங்கு எந்த வன உயிரும் ரயிலில் மோதி இறக்கவில்லை என்று தெரிய வருகிறது. ரயில் தண்டவாளம் அருகே யானைகள் வழக்கமாக கடக்க கூடிய  பகுதிகளை கண்காணிக்கும் பொருட்டு 12 கோபுரங்கள் 50 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டது. இந்த கோபுரங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.

150 மீட்டர் தூரம் வரை இந்த கேமராக்களால் தண்டவாளத்தை கண்காணிக்க முடியும். எனவே யானைகள் இந்த கேமராவால் அடையாளம் காணப்பட்ட உடனேயே அது 24/7 கட்டுப்பாட்டறைக்கு தெரியப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் பணியாளர்கள் அதை ரயிலை இயக்கும் நபர்களுக்கு கைப்பேசி அழைப்பு மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிப்பர். 

இத்துடன் ரயில்வே தண்டவாளத்தின் வெவ்வேறு பகுதிகளில் எச்சரிக்கை
அறிவிப்புகளும் பொருத்தப்பட்டு ரயிலை இயக்கும் ஓட்டுனருக்கு இந்த தகவல்களை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டது. 

நவம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்லும் இரு தடங்கள் வழியே காட்டு யானைகள் இதுவரை 2659 முறை கடந்துள்ளன. இந்த கண்காணிப்பு அமைப்பை நிறுவிய நாள் முதல் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

காட்டு யானைகள் மட்டும் இன்றி பிறவகை வன உயிர்களும் இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா கண்காணிப்பு வசதி மூலம் பாதுகாப்பாக அப்பகுதிகளை கடந்து செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.