தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் அடுத்த இரு நாள்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை படி, ஜூன் 24 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 25, 26ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை பற்றி கோவை வெதர் மேன் சந்தோஷ் தனது X பக்கத்தில் கூறுகையில்:- 

23.6.24 முதல் நீலகிரி, சிறுவாணி, வால்பாறை, மலைப்பகுதிகள், பாலக்காடு கணுவாய், மேற்கு கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்க கூடும். அடுத்த ஐந்து நாட்களுக்கு (வியாழன் வரை) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு மிக கனமழை எதிர்பார்க்கலாம். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை இருக்கக் கூடும்.

நமது அணைகளுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு நல்ல நீர்வரத்து இருக்கும். நமது நொய்யல், பவானி ஆற்றில் வரும் நாட்களில் நல்ல நீர்வரத்து எதிர்பார்க்கலாம். சோலையார், ஆழியாறு, பவானிசாகர், சிறுவாணி, பில்லூர், அமராவதி ஆகிய அணைகளும் நீர்வரத்து அதிகரிக்கும்.

கோயம்புத்தூர் சிட்டி பகுதிகளுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது சாரல் அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில்லென்ற கோவையை அடுத்த பத்து நாட்களுக்கு நாம் எதிர்பார்க்கலாம்.