கோவையின் இந்த பகுதியில் தரமான சாலை எப்போது அமையும் என மொத்த தமிழ் நாடே எதிர்பார்த்துவருகிறது ... விரைவில் நடக்குமா? - இதோ தகவல்
- by David
- Apr 08,2025
கோவை மாவட்டம் பில்லுார் அணை அருகேயுள்ள வனப்பகுதியில், நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன் கோம்பை கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர்.
இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால், இம்மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். 2021ம் ஆண்டில் இவர்கள் சாலையில்லாமல் மலைப்பாதை வழியாக ரேஷன் பொருட்களை வாங்கிவர படும் சிரமத்தை சில பத்திரிகைகள் வெளிகொண்டுவந்தனர்.
அதையடுத்து இம்மக்கள் எந்த அளவுக்கு சாலையில்லாமல் சிரமப்படுகின்றனர் என்பது சென்ற பிப்ரவரி இறுதியில் நடந்த ஒரு சோக சம்பவம் கோவைக்கு மட்டும்மல்ல, ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.
கடம்பன் கோம்பையை சேர்ந்த மணி (48) என்பவர் உடல்நல குறைவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலை அங்கிருந்து அவருடைய கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டபோது, நீரடி எனும் பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடம்பன் கோம்பைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், வாகனத்தை இயக்க மறுத்துவிட்டார்.
இதனால் நீண்ட கம்பங்களில் துணியை கட்டி, மணியின் உடலை ஊர்மக்கள் எடுத்து சென்றனர். அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சிலரால் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் வைரலானது. இந்த காட்சி தமிழக மக்கள் பலரின் மனதில் வலியை ஏற்படுத்தியது.
கோவைக்கு புதிதாக கலெக்டராக பொறுப்பேற்ற பவன்குமார் சென்ற மார்ச் 3ம் தேதியன்று, இந்த சம்பவம் குறித்து கடம்பன் கோம்பையில் உடனடியாக கோட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து உள்ளது எனவும் அங்கு பல வகையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட ரூ. 2.5 கோடி மதிப்பிலான சாலைகளை அங்கு அமைக்க மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் கூறினார்.
மார்ச் முதல் வாரத்திலேயே அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைக்கும் பணியை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அப்போது தெரிவித்திருந்தார். 2-3 மாதங்களில் அப்பகுதியில் அனைத்து பணிகளும் துவங்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுகுறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 5.2 கிலோ மீட்டருக்கு தார் சாலை அமைக்க வருவாய் துறை வைத்த கோரிக்கைக்கு கோவை வனத்துறை தரப்பில் இருந்து தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பில்லூர் சாலை முதல் கடம்பன்கோம்பையில் மக்கள் வசிக்கும் பகுதி வரை சாலை அமைக்க நிர்வாக அனுமதிகேட்டு காரமடை பி.டி.ஓ. கோவை மாவட்ட கலெக்டருக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளார். நிர்வாக அனுமதி வழங்கியது அடுத்து டெண்டர் கோரப்படும் என தெரியவருகிறது.