கோவை மக்கள் விரும்பிய புத்தகங்கள் இனி கோவை பொது நூலகங்களில் ... ரூ.2 கோடி+ மதிப்பிலான புத்தகங்கள் நூலகங்களில் விரைவில் ...
- by David
- Apr 30,2025
கோவை மாவட்டத்தில் உள்ள 100+ பொது நூலகங்களில் 1 மாத காலத்திற்க்குள் ரூ.2.12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு அரசு துறை அதிகாரிகள் அவர்களாக புத்தகங்களை தேர்வு செய்து பொது நூலகங்களுக்கு கொடுத்துவந்த நிலை மாறி, தமிழ்நாடு அரசின் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024ன் கீழ் இம்முறை புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு நூலகத்தின் வாசகர்களிடம் அவர்கள் எந்தெந்த நூல்களை வாசிக்க விரும்புகின்றனர் என கேட்டறிந்து, அதை சம்மந்தப்பட்ட நூலகர் அரசு இந்த கொள்முதலுக்காக உருவாக்கிய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இதை ஒரு ஆய்வு குழு தீர ஆராய்ந்து, அதன் பின்னர் அந்த பட்டியல் பொது நூலக இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 191 பொது நூலகங்களில் இருந்தும் வாசகர் விருப்பங்கள் சென்றுள்ள நிலையில் 1 மாதத்தில் புத்தகங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஒவ்வொரு நூலகமும் 500 புத்தகங்களையும் அதிகபட்சமாக 2000 புத்தகங்களையும் பெற உள்ளது.
இந்த வகையில் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலகங்களுக்கு வழங்கப்படுவது வாசகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் நூலகர்கள் வாசகர்களுடன் கலந்து பேசி, அவர்களின் விருப்பத்தை பெற வழங்கப்பட்ட அவகாசம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.