தைப்பூசம் 2025: பக்தர்கள் வெள்ளத்தில் மருதமலை
- by CC Web Desk
- Feb 11,2025
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திரும்பிய திசையெங்கும் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்கிறது.
சூரபத்மன் என்ற அரக்கனை வென்ற முருகப் பெருமானை, தை மாதத்தில் பூசம் நட்சத்திர நாளில் கொண்டாடுவதே தைப்பூச திருவிழாவாகும். இந்த தைப்பூச திருவிழாவில் முருகனின் அறுபடை வீடுகளிலும், மற்ற முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, திருக்கல்யாணம், அபிஷேகம் உள்ளிட்டவை நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு தைப்பூச நாள் முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் செவ்வாய்க்கிழமை வந்திருப்பது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு வருகின்றனர். இதனால் தங்கள் பிராத்தனைகள் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதனிடையே இன்று, காலை 11 மணிக்கு தைப்பூசத் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெறுகிறது. நாளை மாலை 4.30க்கு தொடங்கி 7.30 மணி வரை தெப்பத்திருவிழாவும், தொடர்ந்து, 13ம் தேதி மாலை கொடி இறக்குதல் நிகழ்வும் நடைபெறுகிறது.
தைப்பூசத் திருவிழாவைக் காண கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மருதமலை நோக்கிப் படையெடுத்துள்ளனர். பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா...' என்று ஒருசேர எழுப்பும் கோஷம் பரவசத்தை ஏற்படுத்துகிறது.
பக்தர்கள் பாதுகாப்புக்காக பிப்ரவரி 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை மலைப்பாதையில் எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13,14ம் தேதிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருதமலையில் கூட்ட நெரிசல் அலைமோதி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.