கோவையில் துப்பாக்கி வாங்கி வைத்து இருந்த ஐ.டி நிறுவன ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை கோவையைச் சேர்ந்த நபர்கள் வாங்கி இருப்பதாக தெரியவந்தது இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோவை பீளமேடு அடுத்த வினோபாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியை வாங்கியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பீளமேடு போலீசார் வினோபாஜி நகரில் சந்தேகத்திற்குரிய வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டு உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்ட பிரபு ( 22), காளப்பட்டி அடுத்த காபி கடை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் ஹரி ஸ்ரீ (23) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராமகண்டன் ராஜ் என்பவரின் மகன் குந்தன் ராஜ் (22) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்ட பிரபு ஒரு இந்து அமைப்பின் பொறுப்பாளராக இருப்பதாகவும் ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பீகார் மாநிலத்திற்கு சென்று இவர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்ததும் தெரியவந்து உள்ளது. இவர்கள் எதற்காக துப்பாக்கியை வாங்கி வைத்து உள்ளார்கள் ஏதேனும் சதித் திட்டம் தீட்டி உள்ளனரா ? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் துப்பாக்கியுடன் மூன்று வாலிபர்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ... 3 பேர் கைது!
- by CC Web Desk
- Dec 23,2024