ஊட்டி, அசாம் தேயிலைகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு; கே.பி.ஆர். கல்லூரி நிகழ்வில் இந்திய தேயிலை கழக நிர்வாகிகள் கருத்து
- by David
- Mar 31,2025
கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "தென்னிந்திய டீ" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இந்திய தேயிலை வாரியத்தின் ஆராய்ச்சி இயக்குநர் மகிபால்சிங், கௌரவ விருந்தினராக கிரிஸ்டல் இந்தியா டீ லிமிடெட் நிர்வாக இயக்குனர் தீபக் ஷா, கோயம்புத்தூர் தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் கிரிஷ் நாயர் மற்றும் இந்திய தேயிலை கழகம் மற்றும் பல்வேறு முன்னணி தேயிலை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்திய தேயிலைகளின் பல்வேறு வகைகள், அவற்றின் தனித்துவமான பயன்பாடுகள், அவற்றில் உள்ள மருத்துவ குணங்கள், சத்துக்கள் மற்றும் சர்வதேச சந்தையில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, இந்திய தேயிலைகளின் தரம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தேயிலை உற்பத்தி மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேயிலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேயிலை கழகத்தின் நிர்வாகிகள், இந்திய தேயிலைகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். குறிப்பாக, இந்தியாவில் அசாம் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் தேயிலைகள் வெளிநாடுகளில் அதிகளவு விரும்பப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், பிளாக் டீக்கு இருக்கும் அதே அளவு மருத்துவ குணங்களும் மதிப்பும் கிரீன் டீக்கும் இருப்பதாக தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தென்னிந்திய தேயிலைகளின் முக்கியத்துவத்தையும், அதன் ஏற்றுமதிகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதோடு, இந்தத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் அமைந்தது.'