கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதன் துவக்க நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

மேலும் இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், 20 வருடங்களாக நின்றிருந்த தேர்த்திருவிழா சமீப காலமாக தான் நடைபெற்று வருகிறது என்றார்.

முன்பெல்லாம் சிவராத்திரி அன்று திருத்தேர்விழா இங்கு விமர்சையாக நடைபெறும், ஆனால் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இதை மீண்டும் நடத்த வேண்டும் என்று பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு முன் வைத்ததாகவும் கோரிக்கை முன்வைத்து ஒரு வருடங்கள் ஆகியும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்றார். 

தொடர்ந்து கோயில்கள் பற்றி வானதி பேசுகையில், ஒரு சில கோவில்களில் வசதி மிக குறைவாக உள்ளது எனவும் நேற்று நடைபெற்ற பேரூர் கும்பாபிஷேக விழாவில் கூட்டத்தை கையாளும் திட்டத்தை முன் கூட்டியே போடவில்லை எனவும் கூறிய அவர் கோவில் சார்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.