தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்றுவரும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சென்றமாதம் வேலூரில் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக அந்த ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த ஆய்வுக்கூட்டம் கோவையில் வருகிற 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலர் மதுமதி, இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் உபங்கேற்க உள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக இந்த அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் சீரமைப்பு பணிகள் நிலவரம், 10, 11 மற்றும் +2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள், +2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், இடைநின்ற மாணவர்களின் நிலை கண்டறிதல், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அடுத்த வாரம் ஆய்வுக்கூட்டம்! பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை!
- by CC Web Desk
- Dec 09,2024