சாதிவாரி காணக்கெடுப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டுவந்தார். மத்திய அரசை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட இந்த  தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூன் 24 அன்று கேள்வி நேரத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் GK மணி தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது எடுக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கையில், மத்திய அரசு நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான்  இந்த கோரிக்கையை அமல்படுத்த முடியும் என்றார்.

ஏனென்றால், ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுப்பது தான் இதற்கு தீர்வாக அமையும் என்றார்.

இதை மத்திய அரசு விரைந்து நடத்திட அதை வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.