உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் அமைச்சர் பேசுகையில்:- முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி  நம் தாய் மொழி தமிழை  எப்படி பாதுகாக்க உழைத்தார்களோ, அது போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு வழிகளில் இந்த தமிழ் துறையை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறார், என்றார்.

இன்றைய சூழலில் மாற்று மொழிகளின் ஆதிக்கங்கள் அதிகம் இருக்கிறது. தமிழை விட ஆங்கிலம் போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் மூன்றாவது மொழியை திணிக்க ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது, என கூறினார்.

தாய்மொழிக்காக இன்னுயிரை மாய்த மண் தமிழ்நாடு. அந்தப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால் தான் தமிழ் இன்று வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே எப்படி நாம் தாயை மதிக்கிறோமோ அதைவிட கூடுதலாக தாய் மொழியை மதிக்க வேண்டும். தாய் மொழியை பாதுகாத்து வணங்கி போற்ற வேண்டும். தாய் மொழியை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும், என்றார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.