ஜான் ஜெபராஜ் மீதான வழக்கில் மற்றுமொருவர் கைது
- by CC Web Desk
- Apr 17,2025
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கில் கைதான கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ்க்கு உடந்தையாக இருந்தாக கருதப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளுக்கு சென்ற வருடம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு சிறுமியின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு விமான நிலையங்கள் எச்சரிக்கை படுத்தப்பட்டன.
இதை அடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன்னை பிரிந்து வாழும் தன் மனைவி மற்றும் குடும்பத்தினர் இவ்வாறு சிறுமிகளை தூண்டிவிட்டு தன் மீது விண் பழி சுமத்த வைத்துள்ளனர் என அவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டிருந்த மனுவில் கூறியிருந்தார்.
மேலும் முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் தான் கட்டுப்படுவேன் என்றும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அவர் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் இரண்டாவதாக பென்னட் ஹாரிஸ் (32) என்பவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துடியலூர் பகுதியை சேர்ந்த பென்னட் ஹாரிஸ், ஜான் ஜெபராஜின் உறவினர் என கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடப்பட்டு வந்த பென்னட் ஹாரிஸ் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.