போராடும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர் புறநகர பகுதிகளில் கடைகள் அடைப்பு!
- by David
- Apr 15,2025
கோவை சோமனூர் - கருமத்தம்பட்டி பகுதியில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும், ஏப்ரல் 11 (வெள்ளி) முதல் 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருக்கின்றனர்.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப, கூலி உயர்வு வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர், கோவை புறநகரப் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஓ.இ மில்கள் உற்பத்தி நிறுத்தம்!
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோவையில் ஓ.இ மில்களும் என்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளன.
"ஒப்பந்த கூலியை குறைக்காமல் மற்றும் நியாயமான கூலி கேட்டு போராடும் நெசவாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதுடன் நிரந்திர தீர்வு ஏற்படுத்த கோரி அரசை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (15.4.2025) ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தம் செய்து உள்ளோம்" என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் M.ஜெயபால் கூறினார்.
கிரே, சலவை, காட்டன் பாலீஷ்டர் நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ மில்களின் நூல்களுக்கு தகுந்த விலை கிடைக்கவும், கழிவு பஞ்சுகளின் விலைகளை கட்டுபடுத்த கோரியும், சோலார் நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மின்சார வாரியம் அனைவருக்கும் அமல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்ட 457% டிமாண்ட் சார்ஜ் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், வருடம் ஒருமுறை 6% வரை மின்கட்டணம் உயர்த்த 2022 முதல் ஒழுங்குமுறை ஆணையம் அளித்த உத்தரவை இந்த வருடம் 2025 ல் ரத்து செய்ய கோரியும் இந்த உற்பத்தி நிறுத்தம் நடைபெறுவதாக அவர் கூறினார்.