கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ள சாராயம் குடித்து பலரும் உடல்நல பாதிப்புக்குள்ளாகிய நிலையில் நேற்று முதல் 132 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ள சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று (20.6.2024) மாலை 7.30 மணி நிலவரப்படி  42 ஆக உள்ளது. 100க்கும் அதிகமானவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மரில் உள்ள 16 பேர் நிலைமை கவலை கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுகுட்டி எனும் கோவிந்தராஜ், அவரின் தம்பி தாமோதரன் மற்றும் இவர்களுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்த சின்னத்துரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தரப்பில் ரூ.10 லட்சம், பாதிப்படைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளது. 261 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆணையம் அதன் அறிக்கையை 3 மாதங்களில் வழங்கும். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைசெய்யும்.

அமைச்சர்கள் உதயநிதி, ஏ.வ.வேலு, பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.