கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் இன்று(28.12.2022) மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி, அத்துடன் அமைச்சர்கள் முதல் விற்பனையை ஆரம்பித்து வைத்தனர்.

இக்கண்காட்சி இன்று முதல் அடுத்த 15 தினங்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்படும் சுத்தமான பட்டு மற்றும் காட்டன் ரக புடவைகளுக்கு தனி வரவேற்பு உண்டு. நெசவாளர்கள் தங்கள் உற்பத்திகளை உற்சாகமாக காட்சி படுத்தினர். பொது மக்கள் பலரும் கண்காட்சியின் துவக்கத்தில் கலந்துகொண்டனர்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலர் V.அமுதவல்லி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்; கோவை மேயர் ரங்கநாயகி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதே நிகழ்வில், நெசவாளர் குழும நலத்திட்டம், கைத்தறி ஆதரவுத்திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் முதலிய திட்டங்கள் வாயிலாக பயன் பெறும் 18 பயனாளிகளுக்கு, அமைச்சர்கள் காந்தி மற்றும் செந்தில் பாலாஜி இணைந்து நல உதவிகளை வழங்கினர்.