உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்ய 'கியூ.ஆர்' குறியீடு அறிமுகப்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை!
- by CC Web Desk
- Jan 29,2025
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, "கியூஆர் கோடு" வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு பதிவு செய்யும் "கியூஆர் கோடு" அறிமுகம் செய்ய, அதை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, "உடல் உறுப்பு தானம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமானதாகிறது. இவற்றை தானம் செய்வதன் மூலம் பலருக்கும் வாழ்வளிக்க முடியும். இதனால் பயனாளிகள் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பத்தினரும் பயனடைவார்கள். உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வை அனைவரிடமும் எடுத்துச் சென்று, மற்றவர்களுக்கு வாழ்வளிக்க மனப்பான்மையை உருவாக்க வேண்டும்" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் டி.மகேஷ்குமார், மக்கள் தொடர்பு மேலாளர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.