கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம்., பிரபஷனல் அக்கவுண்டிங் துறை சார்பில், “புரோஃபீஸ்ட்-2024” என்ற மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான வணிகவியல் தொழில்நுட்பப் போட்டிகள், கல்லூரி கலையரங்கில் இன்று (24.09.2024) நடைபெற்றது.
இதன் தொடக்கவிழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். பி.காம். பிரபஷனல் அக்கவுண்டிங் துறைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்பப் போட்டிகளின் முக்கியத்துவம், அதை மாணவர்களுக்கு இடையே நடத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார்.
சிவா கிருஷ்ணா அன்ட் கோ லிமிடெட் நிறுவன பங்குதாதரர் சிவா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களிடம் அவர் பேசும்போது,“ வணிகவியல் படிக்கும் மாணவர்கள் சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ்., உள்ளிட்ட அடிப்படை கல்வித்தகுதிகளைக் கூடுதலாக பெற்றிருப்பது சிறந்தது. இதன்மூலம் நிறைய அனுபவம் கிடைக்கும். தலைமைப் பண்புகள் வளரும். கணக்குப்பதிவியலை ஆழமாகக் கற்றுத் தெரிந்திருப்பது அவசியம். இத்தகைய தகுதிகளைத் தான் வணிகவியல் பட்டதாரிகளிடம் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு” என்றார்.
பின்னர் சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ்., தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்கள் என 20 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இடையே வணிகவியல் தொடர்பான வணிக திட்டங்கள் உருவாக்குதல், பென்சில் ஓவியங்கள் வரைதல், இலச்சினை வடிவமைத்தல், போஸ்டர் வடிவமைப்பு, புதையல் தேடுதல், புகைப்படம் எடுத்தல், இ-ஸ்போர்ட்ஸ், கனெக்சன்ஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான வணிகவியல் தொழில்நுட்ப போட்டிகள்
- by CC Web Desk
- Sep 24,2024