கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா", கல்லூரி கலையரங்கில் நேற்று (05.09.2024) நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.எல்.சிவக்குமார், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். கணினி அறிவியல் மற்றும் காக்னிசென்ட் சிஸ்டம்ஸ் துறைத்தலைவர் வி.கிருஷ்ணபிரியா வரவேற்றார்.

மத்திய கலால் வரி மற்றும் சரக்கு, சேவை வரித்துறை ஆணையர் கே.ராமகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார். 

இதன்படி கடந்த ஓராண்டு காலமாகச் சிறப்பாகக் கல்வி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றில் முதலிடம் பிடித்த எம்.பி.ஏ.. இயக்குநர் ஜெ.பாமினி மற்றும் எம்.பி.எ.. உதவிப் பேராசிரியர் தே.திவ்யா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம். கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் எம்.பிரணீஷூக்கு ரூ.10 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பி.காம். தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் து. சசிகலாதேவிக்கு ரூ.5 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோல் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் துறைகளுக்கான விருதுகளை முதலிடம் பிடித்த மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைக்கு தலா ரூ.25 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறைக்கு ரூ.20 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பன்னாட்டு வணிகத்துறைக்கு ரூ.15 ஆயிரம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பட்டிமன்றம், பாட்டு, சமையல், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.